உதயநிதி ஸ்டாலின் கைது: தலைவாசலில் திமுகவினர் சாலை மறியல்; ஏராளமானோர் கைதுசேலம், ஆக. 4:தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்டம், தலைவாசல் ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.தலைவாசல் ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கிய போராட்டம் பின்னர் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலாக மாறியது. போராட்டத்திற்கு தலைவாசல் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி தலைமை வகித்தார்.காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். கைதானவர்களில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.இந்தப் போராட்டத்தால் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.
சேலம் செய்தியாளர் பாலமுருகன்
