காமக்காபாளையத்தில் மக்காச்சோள சாகுபடி குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சிதலைவாசல், ஆக. 4:சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையத்தில், ‘ஆத்மா’ (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான பண்ணைப்பள்ளியின் 3-ஆம் வகுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், வேளாண்மைத் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் மற்றும் ‘ஆத்மா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளின் தரத்தை நேரில் ஆய்வு செய்தார்.துணை வேளாண்மை அலுவலர் மணவழகன், வறட்சியைத் தாங்கி பயிர்கள் வளர உதவும் பி.பி.எஃப்.எம். (PPFM) திரவத் தெளிப்புத் தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.பயிற்சியாளர் பிரவீன், சூரிய விளக்கு பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகள் மூலம் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விளக்கினார். பயிற்சியாளர் வெங்கடாசலம், இயற்கை பூச்சி விரட்டிகள், பஞ்சகாவியம், தசக்காவியம் மற்றும் மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கினார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி, ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், நானோ யூரியாவின் பயன்கள் மற்றும் தெளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துவேல், விவசாயிகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பூச்சிகள் மற்றும் நோய்களை அடையாளம் காணும் நடைமுறை பயிற்சியையும் வழங்கினார்.இப்பயிற்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு, மக்காச்சோள சாகுபடிக்கான நவீன மற்றும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து பயனடைந்தனர்.
சேலம் செய்தியாளர் பாலமுருகன்
