10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத அவலம்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை – மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கைசெங்கம், செப். 10:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், நரசிங்கநல்லூர் ஊராட்சி பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 1 முதல் 5 வயது வரையிலான சுமார் 61 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களுக்காக அங்கன்வாடி மையம் அமைக்கப்படாததால், குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.நரசிங்கநல்லூர் ஊராட்சியின் செய்யாற்றங்கரை பகுதியில் வசிக்கும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டுமெனில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், குழந்தைகள் செல்லும் வழியில் செய்யாறு ஆறு குறுக்கிடுவதுடன், செய்யாற்றங்கரை சாலை வசதிகளும் போதிய அளவில் இல்லாததால், சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வது பெற்றோருக்கு மிகுந்த அச்சத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைஇப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுதொடர்பாக செய்தித்தாள்களிலும் செய்தி வெளியான பின்னரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட ஆட்சியரிடம் மனுஇதையடுத்து, அப்பகுதி மக்களின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 29.06.2026 அன்று மனு எண் 488 மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனு அளித்து பல நாட்கள் கடந்தும் இதுவரை அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதனால், தங்கள் பகுதியில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி, அங்கன்வாடி சேவைகள் மற்றும் மதிய உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கோரிக்கைமேலும், நரசிங்கநல்லூர் ஊராட்சி பகுதியில் செய்யாறு குறுக்கிடுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய கோரிக்கைகலசப்பாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பன்னீர்செல்வம், சரவணன் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் நரசிங்கநல்லூர் ஊராட்சி செய்யாற்றங்கரை பகுதிக்கு நேரில் வந்து, பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை கேட்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக, 61 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அங்கன்வாடி மையம் அமைக்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர உரிய சாலை வசதிகளை ஏற்படுத்தவும், செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரசிங்கநல்லூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தலைமைச் செய்தியாளர் P. பிரபு